பெருநகரக் கலை அருங்காட்சியகம்
நியூயார்கில் உள்ள அருங்காட்சியகம்நியூயார்க் நகரத்தின் பெருநகரக் கலை அருங்காட்சியகம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய அருங்காட்சியகம் ஆகும். இதைச் சுருக்கமாக "த மெட்" என்றும் அழைப்பதுண்டு. 2018 இல் மூன்று இடங்களில் உள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 6,953,927. இதன் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய அருங்காட்சியகமாக இது உள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் நிரந்தர சேகரிப்பின் 17 பிரிவுகளில் இரண்டு மில்லியன் ஆக்கங்கள் உள்ளன. மான்கட்டனின் மேல் கிழக்குப் பக்கத்தில், "மியூசியம் மைல்" என அழைக்கப்படும் வீதியை அண்டி, மத்திய பூங்காவின் கிழக்கு விளிம்புப் பகுதியில் அமைந்த இதன் முதன்மைக் கட்டிடம் பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய காட்சியகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. மேல் மான்கட்டனில் அமைந்துள்ளதும், ஒப்பீட்டளவில் மிகவும் சிறியதுமான இன்னொரு பிரிவு ஓவியம், கட்டிடக்கலை, மத்தியகால ஐரோப்பாவைச் சேர்ந்த கலைப்பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய விரிவான சேகரிப்புக்களைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தின் நவீன, சமகாலக் கலைத் திட்டத்தை விரிவாக்கும் நோக்கத்துடன் 2016 மார்ச் 18 அன்று மடிசன் அவெனியூவில் "மெட் புரோயர்" அருங்காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.